search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஞ்சவர்ணேஸ்வரர் கோவில்"

    திருச்சி உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் தேருக்கு சக்கரங்கள் பொருத்தும் பணி முடிந்து உள்ளது.
    திருச்சி உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோவில் மிகவும் பழமை வாய்ந்ததாகும். சோழ மன்னர்கள் காலத்தில் உருவான இக்கோவிலில் அருள் பாலித்து வரும் இறைவன் உதங்கமா முனிவருக்கு ஐந்து நிறங்களில் காட்சி அளித்ததால் பஞ்சவர்ணேஸ்வரர் என்றும், ஐவண்ணநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசித்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். வைகாசி திருவிழாவின் ஏழாம் நாள் தேரோட்டம் நடைபெறும்.

    கடந்த 80 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட தீ விபத்தில் கோவில் தேர் எரிந்து விட்டதால் கடந்த பல ஆண்டுகளாக சவுக்கு கம்புகளால் உருவாக்கப்பட்ட தேர் தான் வீதி உலா வருகிறது. எனவே மரத்தினால் ஆன புதிய தேர் உருவாக்கப்பட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு புதிதாக தேர் உருவாக்குவதற்கு ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. கோவிலின் பிரதான நுழைவு வாயில் கோபுரம் அருகில் வைத்து சுமார் 25 அடி உயரத்தில் புதிய தேர் உருவாக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது.

    இந்த தேருக்கான இரும்பு சக்கரங்களை திருச்சி பாய்லர் ஆலை (பெல்) வடிவமைத்து கொடுத்து உள்ளது. இந்த சக்கரங்கள் நேற்று தேரில் பொருத்தப்பட்டன. இந்த தேரில் உற்சவர் எழுந்தருள்வதற்கான சிம்மாசனம் அமைத்தல் உள்ளிட்ட சில பணிகள் இன்னும் முடிவடையவில்லை. மேலும் வர்ணம் பூசும் பணியும் நிலுவையில் உள்ளது. இந்த பணிகள் எல்லாம் முடிந்த பின்னர் இன்னும் 2 மாதங்களில் தேர் வெள்ளோட்டம் நடைபெறும். அடுத்த வைகாசி திருவிழாவின்போது புதிய தேர் தேரோடும் வீதிகளில் பவனி வரும் என கோவில் அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

    பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில் இறுதியாக கடந்த 7.2.2003-ல் கும்பாபிஷேகம் நடந்து உள்ளது. பொதுவாக இந்து கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஆகம விதிமுறையாகும். ஆனால் பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 15 ஆண்டுகள் கடந்து விட்டதால் திருப்பணி வேலைகளையும் தொடங்கி விரைவில் கும்பாபிஷேகம் நடத்த தமிழக அரசு உத்தரவிடவேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 
    ×